Thursday, February 4, 2010

இனி "படிக்காதவன்" தளத்தில் தங்களை சந்திக்கிறேன்

படிக்காதவன் தளத்தில் தங்களை சந்திக்கிறேன்.. அங்கு வருகை தாருங்கள்..

http://www.padikkathavan.blogspot.com

Saturday, August 15, 2009

சும்மாவா கிடைத்தது சுதந்திரம் ? (பகுதி 1)

அன்றொரு நாள் !

திருப்பூரிலே ஒருவன் ! - அகவை
இருபத்தெட்டே ஆன இளைஞன் !
தந்தை இறந்து சில நாட்களே ஆன சோகம் !
கைக்குழந்தையுடன் இளம் மனைவி !

அந்த வாலிபனுக்குச்
செய்தியொன்று வருகிறது!

தோழா நமது தேசத்திற்கு
நாசம் விளைவிக்கும்
மோசக்கார வெள்ளையர்களை
விரட்டியடிக்க கொடிப் போராட்டம் என்று !

அந்த இளைஞன் சிறிதும்
அஞ்சவில்லை !
வரமாட்டேன் என்று
கெஞ்சவில்லை !

சட்ட மறுப்பைக் காட்டிடச்
சட்டெனப் புறப்பட்டான் !
மனைவியைப் பார்க்கவில்லை !
மக்களையும் பார்க்கவில்லை !

"எங்கே நண்பர்கள்?
வாருங்கள் செல்வோம் ! - வஞ்சக
வெள்ளையனை வெல்வோம் ! "
என்று கூறி
தேசத்தின் சின்னமாம்
தேசியக் கொடியைத்
தோளிலே ஏந்திக் கொண்டு
தெருவிலே நடக்கின்றான் !

திரும்பிப் பார்த்தால்
அவன் பின்னே ஆயிரம் பேர்!
அத்தனை பேரும் தம்
கையிலே கொடிக்கம்புகளுடன் !

அவரவர் தோளிலே
கொடியினை ஏந்தி
அந்த வீரன் தலைமையிலே
கூடுகிறார்கள் ! -
கோபத்துடன் கூவுகிறார்கள் !

"ஒண்ட வந்தவனே
ஓடிப்போ !
ஓடிப்போ ! ஓடிப்போ ! ! "

"விடுதலை செய் விடுலை செய் !
காந்தியாரை விடுதலை செய் ! "

"பாரத தேசம் எங்களுக்கே
எங்களுக்கே எங்களுக்கே !

வியாபாரிக்கு இடமில்லை !
வெளியே போடா வெறும் பிள்ளை! "

விண்ணை முட்டின
வீர முழக்கங்கள் !
கொடிகளை ஏற்றுகிறார்கள் !
கொண்டாட்டம் போடுகிறார்கள் !

வருகிறான் வெள்ளைத்துரை -
வெறிகொண்ட ஊளையுடன் !

"கொடிகளை கீழே விடச்
சொல்லுங்கள் ! -
இல்லையேல் அவர்களைக்
கொல்லுங்கள் !!

அவனோடு வந்த
அடிமைப்பட்டாளம்
அடித்து நொறுக்குகிறது
அத்தனை பேரையும் !

கும்பிலிக் கூட்டத்தினர்
கொட்டமடிக்கிறார்கள் !
பெண்டிரையும் பெரியோரையும்
சிறுவரையும் கூடச்
சிதறடிக்கிறார்கள் !

கயவர்கள் கம்பினைச் சுழட்ட
கால்கள் பல முறிந்தன !
தடியர்கள் தடிகளை வீசிட
தலைகள் பல உடைந்தன !

இளைஞர் கூட்டம்
இடிக்கவில்லை ! - வெள்ளைத்
துரையைத் திருப்பி
அடிக்கவில்லை !
ஆங்கிலேயனை
மதிக்கவில்லை ! - அன்னைக்
கொடியை சிறிதும்
மடிக்கவில்லை !

அஞ்சாமல் எதிர்கொண்டனர்
அவர்கள் !

எம் உயிரே போனாலும்
எதிரிகளிடம் தரமாட்டோம்
என்றபடி
ஏந்தியிருந்தனர் கொடிகளையே !

கெட்டவர்களின் கோபம்
கட்டுக்கடங்கவில்லை !

"தலை மேலே தடியால் அடியுங்கள் !
தடுப்போரின்
தலைகளையே கிள்ளி எறியுங்கள் !"
ஆவேசமாய் உத்தரவிடுகிறான்
ஆங்கிலேயத் துரை !

முதலிலே நிற்கும் - நம்
இளைஞனின்
முதுகிலே விழுகிறது முதல் அடி !
ஒரு வெள்ளை மிருகம் அவன்
கைகளை உடைக்கிறது ..
மற்றொன்று அவன் கால்களை !

இளைஞன் சிறிதும் அழவில்லை !
இங்குமங்கும் விழவில்லை !
பிடியைச் சற்றும் விடவுமில்லை
கொடியும் கீழே விழவுமில்லை !

உச்சத்தில் வெறியேற
ஒரு வெள்ளை விலங்கு
அவன் தலையிலே
தடியினால் பலம் கொண்டு
தாக்குகிறது!

தடையேதும் இல்லாததால்
தலை கீழே சாய்கிறது !

உயிர்போகும் நேரத்திலே கூட
அவன் உதடுகள் உச்சரித்தது -

" வந்தே மாதரம் ! வந்தே மாதரம்!
வந்தே மாதரம் ! வந்தே மாதரம் ! "

அவனல்லவோ மனிதன் !
அவனல்லவோ வீரன் !
அவனல்லவோ இளைஞன் !
அவனல்லவோ இந்தியன் !
அவனல்லவோ குமரன் !
திருப்பூரின் குமரன் !
தேசபக்தியின் சிகரம் !

அவனுடைய பக்தியிலே
ஆயிரத்தில் ஒரு பங்கேனும்
நம்மிடம் இருந்தால் போதும்
நம் நாடு பிழைக்கும்;
நல்லோர் நினைவுகள் தழைக்கும் !
ஜெய்ஹிந்த் !

- ஈ ரா

Monday, November 3, 2008

பெரு மழை பெய்தது


நேற்றைக்கு மாலை அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்லும் பொது, பல பேரிடம் இருந்து கைபேசியில் அழைப்பு வந்தது.... இரவு 8 மணிக்கு சன் டிவி யில் தலைவர் பேச்சு ஒலிபரப்பு என்று...


இந்த அழைப்புக்களில் பல எனது நண்பர்களின் பெற்றோர்களிடம் இருந்து வந்ததுதான் ஆச்சர்யம்...


8 மணிக்கு இன்னும் சில மணித்துளிகளே இருந்த நேரத்தில் சடாரென்று என் நண்பர் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்தேன்...(அவர் வீட்டிற்கு நான் அடிக்கடி செல்லும் வழக்கமும் அன்னியோநியமும் உண்டு என்பதால் முன் அறிவிப்பு எதுவும் தேவைப்படவில்லை) அந்த நண்பரும் அவரது பெற்றோரும் குணத்தால் மிக சிறந்தவர்கள் என்றாலும் அவர்கள் வீடு சற்று பொருளாதார ரீதியில் சுமாரான பகுதியில் உள்ளது... உள்ளே நுழைந்ததும். பார்த்தால், ஏற்கனவே சில தாய்மார்கள் 8 மணிக்காக ஆவலோடு உட்கார்ந்து இருந்தார்கள். நான் சென்ற போது, அந்த வீட்டில் நண்பர் இல்லை, அவர் வேறு ஒரு நண்பர் வீட்டில் நிகழ்ச்சியை பார்க்க சென்று இருந்தார்..நான் அவரிடம் வந்திருப்பதாக சொன்ன உடன், அவரும் மற்ற நண்பர்களும் என்னோடு ஆஜர்...


சரியாக 8 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது.. அதற்குள் என் வீட்டில் இருந்து அழைப்பு, "ஏய், எங்க இருக்க, ரஜினி சன் டிவி இல ரஜினி பேசுறாரு, வர முடியலைன்னா, பக்கத்தில எங்கயாவது பாரு...."


ஒரு சினிமா நடிகரின் ரசிகர் மன்ற நிகழ்ச்சியைப் பாரு என்று எந்த தாயாவது, பெற்றோராவது இது வரை கூறியது உண்டா என்று மனதினுள் வியந்தபடி, "நான் பார்த்துட்டு இருக்கேன், நீங்களும் பாருங்க" என்று கூறிவிட்டு நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்தேன்..


அதன் பிறகு, பெங்களூரில் இருந்து சக பதிவர் அருண்ஜி மற்றும் பல நண்பர்கள், எனக்கு இன்பார்ம் செய்த வண்ணம் இருந்தார்கள்... நானும் நன்றி தெரிவித்து விட்டு, நிகழ்ச்சியில் முழு கவனத்துடன் ஈடுபட்டேன்...
சில முக்கியமான கேள்வி பதில் சுவாரசியங்களை மட்டுமே இங்கே பதிகிறேன்...


"முதல்ல பெத்தவங்கள நீங்க கவனிங்க, மத்தவங்க உங்களை தானா கவனிப்பாங்க" இந்த பதிலைக் கேட்டதும் நமது நண்பரின் மூத்த சகோதரி, உணர்ச்சி வசப்பட்டு, "தம்பிங்களா நல்லா கேட்டுக்குங்க... அவரு சொல்றத கேட்டு நடந்தா ஒவ்வோர் வீடும் சொர்க்கம் மாதிரி இருக்குமே " என்றார்...


அடுத்து, "அந்தஸ்து என்பது நீங்க சமுதாயத்துக்கு செய்யற நல்ல விஷயங்கள பார்த்து தானா வரணும் கண்ணா, அத நாம தேடிப் போகக் கூடாது என்று தெளிவாக சொன்ன போதும்,
"பணம் ஜனம் ரெண்டும் சேர்ந்தா அங்க அரசியல் வரும், பிரச்சினை வரும்... நான் உங்க பணத்தை எடுக்க மாட்டேன், நீங்க என் பணத்தைக் கேட்காதீங்க... என்னால முடிஞ்ச நல்ல உதவிகளை, என் நேரடி கண்காணிப்பில் நான் செய்றேன்.. நீங்களும் உங்களால் முடிஞ்சத நீங்களே செய்யுங்க" என்ற போதும்,
ஒரு பெரியவர், "சபாஷ்டா, இவ்வளவு தைரியமா, காசை பத்தி பேசுறதுக்கு சரியான தில்லு, பெரியார் பேசற மாதிரி கட் அண்ட் ரைட்டா பேசுறாரே" என்று வியந்தார்..


கிருஷ்ணகிரியில் தாய் தந்தை நினைவிடம் பற்றி அவர் பதில் அளித்த போது, நான் எனது மூளையை பல்வேறு கோணங்களில் அலை பாய விட்டுக் கொண்டு இருந்த போது, அங்கு இருந்த ஒரு வயதான பெண்மணி, "அப்பா அம்மாவுக்கு கோயில் கட்டணுமாம், மகராசன்" என்று ஒரே வரியில் புரிந்து சொன்ன போது, எனக்கு சம்மட்டியில் அடித்ததுபோல் இருந்தது..


கடைசியாக, "நான் நல்ல கணவனாக, தந்தையாக, குடும்பத் தலைவனாக, தயாரிப்பாளர்களுக்கு நல்ல நடிகனாக என் கடமையை சரியாக செய்கிறேன், நீங்களும் அது போல் உங்க கடமையை சரியாக செய்யுங்க என்று சொன்ன போது, " கிட்டத்தட்ட எல்லாருமே கண் கலங்கிய நிலையில் ஒரு ஆனந்தத்தில் இருந்ததைக் காண முடிந்தது..


நிகழ்ச்சி முடிந்து மகிழ்ச்சியுடன் வரும்போது, மனதில் பல சிந்தனைகள்..இந்த மனிதனின் தொண்டனாக இருக்க, இன்னும் எவ்வளவு பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும் என்னை என்று உணர்ந்தேன்... எனது கடமைகள் என் கண் முன்னே விஸ்வரூபமாகத் தெரிந்தது.....


ரஜினி சொன்னது போல் ஒருவருக்கு பல குரு ராஜர்கள் இருப்பார்கள், எனக்கும் அப்படியே; ரஜினி உட்பட.....


அன்புடன்,
ஈ ரா

Sunday, November 2, 2008

தெளிவான பார்வையே - உன் பெயர்தான் ரஜினியா

ஈழம் என்றால் ஒரு யுத்த பூமி, சோக பூமி.. அங்கு இருப்பவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்ற ஒரு மாயத் தோற்றத்தை தவிடு பொடியாக்கிய ரஜினி, அங்குள்ள மக்களின் அன்பையும், இனிமையையும், அவர்கள் துயரையும் பல கோடி தமிழர்களும் உணரும் வண்ணம் உணர்த்தி இருக்கிறார்.

ரஜினி பேசியதால் யுத்தம் நின்று விடப் போவதில்லை.. சிங்களரின் கொட்டமும் அடங்கப் போவதில்லை.. ஆனால், பல லட்சம் தமிழர்களுக்கு ஈழத் தமிழர்களின்பால் ஒரு கழிவிரக்கம் தோன்ற ஒரு தூண்டு கோலாக அவர் பேச்சு அமைந்தது என்றால் மிகையல்ல...

எவ்வளவோ பேர் எத்தனையோ மேடைகளில் பேசும் போதும், அவர்கள் உணர்ச்சிக்குப் பின்னால் ஒரு நம்பகமற்ற தன்மையும், சுய நலமும், அரசியல் ரீதியான சமாளிப்புகளும் தான் பிரதானமாகத் தெரியுமே தவிர அவர்களின் கருத்து எடுபடாது... மிகச் சிலர் உண்மையான உணர்வுகளை, சரியான முறையில் வெளிப் படுத்துவார்கள்... அந்த வகையில், தனது தெளிவான பேச்சின் மூலமும், தைரியமான கருத்தின் மூலமும், தனது பெரும் ரசிகர் கூட்டத்துக்கு மட்டும் அல்லாது உலகெங்கும் இருக்கும் கோடானு கோடி தமிழ் நெஞ்சங்களுக்கு நிதர்சனத்தைப் புரிய வைத்த பாங்கு என்றைக்கும் பாராட்டுக்கு உரியது...

நிதியையும் கொடுங்கள், நீதியையும் சொல்லுங்கள் என்று உரக்க குரல் கொடுத்து தான் தெளிவான பார்வை கொண்டவர் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டார் ரஜினி...

ராமேஸ்வரத்தில் ஈழருக்கு உதவி ஓடியிருக்க வேண்டிய வெள்ளத்தில் தம் வக்கிரங்களுக்கு வடிகால் தேடிக் கொண்ட வாயுள்ள ஜீவன்கள் இனியாவது திருந்தி ஓரணியில், சத்தியத்தின் பக்கம் நின்றால் சரித்திரம் அவர்களை வாழ்த்தும்...

மடியில் கனமில்லாத, சுய நலம் இல்லாத, இதை வைத்து அரசியலோ விளம்பரமோ தேட வேண்டியிராத, ஆட்சியை பிடிக்கவோ - தக்க வைத்துக் கொள்ளவோ தேவை இல்லாத சராசரி தமிழனின் உணர்வைப் படம் பிடித்து, அந்த உணர்வை எழுப்பிய ரஜினி என்னும் மனிதனுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும்...

ஒரு நல்ல மனிதனின், வார்த்தைகள் எந்த விதமான நல்ல அதிர்வுகளை உருவாக்கும் என்பதை அவரது பேச்சைக் கேட்டவர்களும், படித்தவர்களும் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள் - அவர்களும் நல்லவர்களாக, சுய நலம் இல்லாதவர்களாக இருந்தால்.....

நண்பர்களே,

ஓ பக்கங்களில் மட்டுமல்ல ஓராயிரம் பக்கங்களினாலும் சாதிக்க முடியாத சாதனையை "ஆம்பளைங்களாடா நீங்க?" என்ற ஒரே வாக்கியத்தில் சாதித்து சாமானியனை தட்டி எழுப்பும் சக்தி அந்த காந்தத்தில் உள்ளது... அந்தக் காந்தத்தின் அதிர்வலை மென் மேலும் பரவி, சமுதாய அவலங்களை சருகாக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை....

ஈழத் தமிழர் விவகாரத்தை அரசியல் ஆக்கும் வியாதிகளின் கூச்சலுக்கு மத்தியில் ஆதாயம் கருதாமல் ஒலிக்கும் இந்தக் குரலுக்கு மதிப்புக் கொடுத்து உங்களால் இயன்ற உதவியைச் செய்யுங்கள்....

இறை நம்பிக்கை உள்ளவர்கள், அவரவர் கடவுளை வேண்டி, நம் சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் விரைவில் விடியல் பிறந்திட பிரார்த்திப்போமாக....

வாழ்க தமிழ், வாழ்க ரஜினி...

அன்புடன்
ஈ ரா

Saturday, November 1, 2008

ஆம்பளைங்களாடா நீங்க?


ஈழத் தமிழர் ஈரக்குலை நடுங்க வான் வழியும், வழி நெடுகும் குண்டுகளை வீசி கொலை பாதகம் செய்யும் சிங்கள அரசுக்கு, இதை விட கடுமையான ஒரு கண்டனத்தை யாராலும் பதிவு செய்ய முடியாது…..

இதை செய்த, தமிழ் பேசும் நல் தமிழரான ரஜினிகாந்த் அவர்களுக்கு உணர்வுள்ள ஒரு சராசரி தமிழனின் நன்றி…

வழ வழ எனவும் வள வளவெனவும் சம்பந்தமில்லாத கருத்துக்களை கூறி அரசியல் ஆதாயம் தேடும் பல நூறு குரல்களுக்கு மத்தியில் உயிரையும், உடைமைகளையும், மானத்தையும் இழந்த தாய்மார்களின், குழந்தைகளின் வலியை உலகெங்கும் உள்ள இரக்க மனம் கொண்ட நெஞ்சங்களுக்கு நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் ஒரே வார்த்தையில் உணர்த்திய அந்த மனிதனுக்கு என் நன்றி……

அவனுக்கு, ஆம்பல் என்றும் வவ்வல் என்றும் பாடத்தான் தெரியும் என்று நினைத்து இருந்தவர்களுக்கு, தான் ஆம்பளை சிங்கம் என்று நிரூபித்ததற்கு நன்றி….

உயிர் போகும் பிரச்சினையில் ஒரு தனி மனிதனை புகழ்வதா என்று நினைக்கிறீர்களா? இது புகழ்ச்சி அல்ல, நன்றிக் கடன்…

ஆம்.. ” ஒ ” பக்கங்களில் அல்ல ஓராயிரம் பக்கங்களில் கூட அறிவு ஜீவிகளால் தட்டி எழுப்ப முடியாத சாமான்யனின் உணர்ச்சியை ஒரு வார்த்தையில் எழுப்பிய அந்த சக்திக்குத்தான் இந்த நன்றிக் கடன்…..
இன்றைக்கு, படித்த பல பெரும், அறிவு ஜீவிகள் பல பெரும் செய்யும் மூளை சலவைகளால் குழப்பம் அடைந்த பல இலட்சம் படித்தவர்களுக்கும் அதே சமயம் என்ன முடிவு, எது சரி என்று தெரியாத சாதாரண மக்களுக்கும் ஒரு பேச்சினால் புரிய வைக்க முடியும் என்று உணர்தியதற்க்குத் தான் இந்த நன்றிப் பதிவு…

இலங்கை தமிழர்கள் என்றாலே ஏதோ சண்டைக் காரர்கள், தீவிரவாதிகள் என்று பரப்பப்பட்ட செய்திகளால் மனம் குழம்பிக் கிடந்த பல பேருக்கு, அந்த மக்களின் இனிமையையும் அன்பையும் அவர்களின் துயரத்தையும் சொல்ல வேண்டிய முறையில் சொல்லிப் புரிய வைத்ததற்காகவும் தெளிய வைத்ததற்காகவும்தான் இந்த நன்றி….

ஒரே நாளில் ஒரே பேச்சில் லட்சக் கணக்கான ஈழத் தமிழர்களுக்கும், கோடிக்கணக்கான உலகத் தமிழர்களுக்கும் ஒரு உத்வேகத்தைக் கொடுத்ததற்க்காகத்தான் இந்த நன்றி…..

சாமான்ய மக்களும், பெண்களும், சிறுவர்களும், முதியவர்களும் பாதிக்கப் பட்டால் அது எப்படிப் பட்ட நாடாக இருந்தாலும் அழிந்து விடும் என்று பல ராஜபக்ஷேக்களை எதிர்த்துக் குரல் கொடுத்ததற்கு நன்றி…

பல ஆண்டுகள் பல பலத்துடன் போரிட்டும் அழிக்க முடியா விட்டால் , உன் தோல்வியை ஒத்துக் கொண்டு, மக்களை நிம்மதியாக வாழ விடு என்று அறைகூவல் விடுத்ததற்கு இந்த நன்றி…

கொடுங்கோலால் புதைக்கப்பட்டவர்கள், விதைக்கப்படுகிறார்கள் என்று உணர்த்தியதற்கு நன்றி….

எவ்வளவு கொடுத்தாலும் ஈடாகாது என்ற உண்மையை சொல்லி, உச்ச பட்ச தொகையை அளித்து, உச்ச நட்சத்திரம் என்று நிரூபித்ததற்கு நன்றி……

நேர்மையான மனிதனே, இனி வரும் காலங்களில், உன் காந்த சக்தியை பெட்டிக்குள் பூட்டாமல், அதன் அலைகளை இது போன்ற நல்ல செயல்களில் தொடர்ந்து பரவ விட்டு, எங்களை ஆயிரமாயிரம் முறை நன்றி சொல்ல வைக்க வேண்டுமென்று கடவுளை வேண்டுகிறேன்….

அன்புடன்
ஈ ரா

Monday, October 13, 2008

ஒரு விதைக்குள்ள அடைபட்ட ஆல மரம்



அன்பு நண்பர்களே,


எல்லோரும் ஒரு கிளாஸ் நல்ல தண்ணி குடிப்போம் .. மனசை ரிலாக்ஸ் பண்ணுவோம் ... டென்ஷன் ஏத்தும் பேப்பர், ப்ளாக், வெப் சைட் எல்லாத்தையும் மறந்துட்டு வீட்டுக்கு நல்ல பிள்ளையா, நாட்டுக்கு நல்ல பிள்ளையா இருக்க முயற்சி பண்ணலாம்...


இது வரைக்கும் தலைவர் என்னிக்குமே ஒரு குறிப்பிட்ட டைம் பிரேம் கொடுத்து ஜகா வாங்கியதில்லை... ஆனால் இந்த முறை "எந்திரன் முடியும் வரை" என்று முதன் முறையாக ஒரு வாய்தா வாங்கி இருக்கிறார்.... இதில் இருந்து அவருக்கும் கண்டிப்பாக காலத்தின் அருமை தெரிவதும், ரசிகர்களின் வேகத்தை மிக நீண்ட நாட்களுக்குத் தள்ளிப் போட முடியாது என்பதை அவர் முழுவதும் உணர்ந்திருப்பதும் நன்கு புலனாகிறது.....


உண்மையிலேயே நாடு நல்லா இருக்கணும், தலைவர் மேல நம்பிக்கை வேணும் அப்படின்னு நினைக்கிறவர்கள் தலைவர் மாதிரியே அவரவர் சக்திக்கு ஏற்ப ஒரு காரியத்தை, சாதிக்கக் கூடிய ஒரு விஷயத்தை டார்கெட்டாக வைத்துக் கொள்ளுங்கள்... தலைவர் சாதிக்கும் நேரத்தில் நீங்களும் ஏதேனும் ஒரு சாதனையை நிகழ்த்தி நெஞ்சை நிமிர்த்திக்க் கொள்ள முயற்சி செய்யுங்களேன்..


குறைந்த பட்சம் நமது நல்ல காரியங்களால் ஒரு பத்து பேராவது நம் மீது நல்ல எண்ணம் கொள்ள உறுதி கொள்வோம்....

"விசிலடிச்சான் குஞ்சுகள், "ஏன்டா இவ்வளவு படிச்சுட்டு இப்படி இருக்க?, சினிமாக்காரன் பின்னாடி சுத்தறியே வெக்கமா இல்ல? " என்பது போன்ற அறிவு ஜீவிகளின் கேள்விகளுக்கு, நமது நல்ல காரியங்கள் எனும் மௌனக் கேடயத்தை அரணாக்குவோம்.....குத்திக் குத்தி முனை மழுங்கிய வாட்களை அவர்களே கீழே போட்டு விடுவார்கள்..

ஒரு விஷயம்.....


ரஜினி இப்படி அறிக்கை விட்டார் என்று இன்னும் சில வாரங்களுக்கு அவரை பத்திரிகைகளும் டிவிக்களும் நையாண்டி செய்யப் போகின்றன.... போலி ரசிகர்களையும், ரஜினியை உணராத மனிதர்களையும் தூண்டி விட்டு குளிர் காயும் முயற்சிகளும் நடக்கும்... ரஜினி ஏமாற்றி விட்டதாக கதை களை கட்டும். ஆனால் அதே சமயம் ரஜினி எதுவுமே வாய் திறக்காத போது ஏதோ இன்வெஸ்டிகேஷன் புலிகள் போல் மாய்ந்து மாய்ந்து பில்ட் அப் கொடுத்து எழுதி ரசிகர்களை தூண்டிய பத்திரிகைகள் தங்கள் செய்தி அனைத்தும் தவறு என்பதை மறைத்து மொத்த பழியையும் ரஜினி மேல் போடுவார்கள்....


இவர்கள் எப்பொழுதெல்லாம் கவர் ஸ்டோரிகளும் பிறரிடம் கவர் வாங்கின ஸ்டோரிகளும் எழுதுகிறார்களோ அப்போ எல்லாம் ரஜினி ஒரு மறுப்பு அறிக்கை கொடுக்கணும் என்று எதிர்பார்க்கிறார்களா? அடுத்த வாரம் புதன் கிழமை என்ன சாப்பிடுவோம் என்பதே நமக்கு தெரியாத போது என்றோ நடக்கப் போகும் (அல்லது நடக்காமலே கூட) போகும் விஷயத்தை இப்பவே உறுதி செய்ய முடியுமா?


ரஜினி என்றைக்கும் ஒரு வித்தியாசமான மனிதர்..... அவர் யோகி.... புரிந்தவர்களுக்கு அவர் புடம் போட்ட தங்கம்....


உடனடி அரசியல் விரும்பும் ரசிகர்களே,


தயவு செய்து ரஜினியைப் புரிந்து கொள்ளுங்கள்.... தலைவர் என்றைக்குமே நம்மைக் கட்டுப்படுத்தியது இல்லை.... அன்றைக்கு பிஜேபி கூட்டணியை ஆதரித்த போது கூட, இது என் நிலை தான், ரசிகர்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம்... ஆனால் ரத்தம் வழிய என் ரசிகர்களை தாக்கிய பாமக இடங்களில் மட்டும் அவர்களை கண்டிப்பாக எதிர்ப்போம் என்றார்....


தான் ஒரு ஸ்திரமான முடிவுக்கு வராத போது, தன் தொண்டர்களுக்கு முழு சுதந்திரத்தையும் தர நினைக்கும் உயர்ந்த மனிதர் அவர்.... தன் சுய லாபங்களுக்காக முட்டாள் முடிவுகளுக்கு, தொண்டர்களைப் பகடைக் காய்களாக ஆக்கும் தலைவர்களையே பார்ப்பவர்களுக்கு ரஜினியின் செயலும், அதிலுள்ள தனி மனித சுதந்திர ஈடுபாடும் புரிய நியாயம் இல்லை....


இவர் ஒரு வித்யாசமான தலைவர்....இவர் விரும்புவது வித்யாசமான அமைப்பு... அது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்...


நாம் நம்மைச் சுற்றி ஒரு வட்டத்தைப் போட்டுக்கொண்டு கட்சி, ரசிகன், தொண்டன், அமைப்பு எல்லாவற்றிற்கும் நம்மை அறியாமலேயே பிற இத்துப் போனவர்களை உதாரணமாகக் கொள்கிறோம்.... அங்குதான் பிரச்சினையே... ரஜினியுடன் கம்பேரிசன் பண்ணிப் பார்க்க இங்கு யாரும் இல்லை... அதனால் தான் அவர் ஏமாளியாகவும் கோமாளியாகவும் சித்தரிக்கப் படுகிறார். ... ஆனால் என்றைக்கும் அவர் அடி மனதில் சத்தியமும் நேர்மையும் விழித்துக்கொண்டே இருக்கின்றன.....


பாலகுமாரன் ஒரு நாவலில் எழுதியிருப்பார்.... ராஜ ராஜ சோழன் பெரிய கோயிலை கட்டும்போது சிற்பிகள் கேட்டார்களாம், " ஐயா, இந்த கோயில் காலத்தை கடந்து தங்கள் பேரைச் சொல்ல வேண்டுமே, நாங்கள் அதற்காக எங்கள் முழு திறமையையும் அதீத உழைப்பையும் செய்யட்டுமா ?" என்று... அதற்கு அவன், " அப்படி எல்லாம் ஒன்றும் வேண்டாம்.... இது கடவுளுக்கு செய்யும் வேலை, அந்த வேலையை சத்தியத்துடன் செய்யுங்கள், சத்தியம் மட்டுமே என்றைக்கும் காலத்தைத் தாண்டி நிலைத்து நிற்கும்" என்றானாம்..


அதே போல்தான், ரஜினியின் நிலையும்...நிகழ் காலத்தில் செய்யும் காரியத்தை சத்தியத்துடன் செய்தால் எதிர்காலத்தில் அது நிச்சயம் நிலைத்து நிற்கும். மனதில் வைராக்கியமும், சமநிலையும், சத்தியமும் ஏற்பட்டு விட்டால்தான் அவர் மனதில் எழும் ஓர் உன்னத நிலையை உணர முடியும்.. ஒரு கட்சியோ, பதவியோ அது கண்டிப்பாக இப்பொழுதே வேண்டும் என்று தனக்கோ தன்னை சார்ந்தவர்களுக்கோ அளவு கடந்த ஆசை ஏற்படும்போது, அல்லது, ஏற்படுத்தப் படும்போது, இல்லை, இப்போ இது கூடாது... .. இந்த ஆர்வம் மட்டுப் படவேண்டும்... உணர்ச்சிகளை கடந்த நிலையில் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்த வேண்டும்.. தேடல் இந்த வழியில் அறிபறியில் நடக்கக் கூடாது என்று யோசிக்கும் மனிதன் தான் உண்மையான தலைவனாக, வழிகாட்டியாக வர முடியும் என்பதை அவர் உணர்ந்திருப்பதே அவர் செயல்களில் இருந்து நன்கு தெரிகிறது...


தனக்கு வேண்டியதோ அல்லது தான் விரும்பியதோ அது நல்ல விஷயமாகவே இருந்தாலும் கிடைக்கவில்லை என்பதற்காக கொடுக்காதவன் மீது கொண்ட மதிப்பு குறையக் கூடாது...அப்படி குறைந்தால் குறைபாடு நம்மிடம் தான்.... "நீ மிட்டாய் தரலேன்னா உன்கூட டூ என்று சொல்லும் சிறு பிள்ளைத்தனம்தானே ?"


ஆகவே, மற்ற நடிகர்களோடும், சராசரி தலைவர்களோடும் ஒப்பிட்டு இது போல் இல்லையே, அவர் போல் இல்லையே என்றெல்லாம் புழுங்கினால் நஷ்டம் நம் மனதுக்கும் உடலுக்கும் தான்....


அவருக்கு தெரியும்... காலம் எப்போது என்று.....


இந்த வரிகளைப் பாருங்கள்...


"ஒரு விதைக்குள்ள அடைபட்ட ஆல மரம் கண்விழிக்கும் அது வரை பொறு மனமே..."


- நாம் இங்கே உள்ளே புதைந்திருக்கும் விதை, இப்போ வந்தால் தான் வளரும், இல்லையேல் வளரவே முடியாது என்று நாமாகவே நினைத்துக் கொண்டு, கையில் ஒரு சிறு வாளியில் தண்ணீரோடு நின்று கொண்டிருக்கிறோம்... ஒன்றை மறந்து விட்டோம்... அந்த விதை தெய்வத்தால் தூவப்பட்டது என்பதை.... அதற்கு பெருமழை தானாகவே கிடைக்கும்.... விருட்சமாய் வளரும்... கவலைப் படாதீர்கள்.... சிறு ஆடுகள் மேய்ந்து களைத்து ஓய்ந்த பின், நிழல் தரும் பெரும்குடையாகவும் அரணாகவும் அந்த விருட்சம் தானே மேலே எழும்பும்.....


அவர் வழி என்றும் தனி வழி தான்......


வாழ்க ரஜினி இன்னும் பல்லாண்டு........


அன்புடன்,ஈ. ரா
http://www.aakkal.blogspot.com


Friday, April 4, 2008

சிங்கத்தின் கர்ஜனை

சிங்கத்தின் கர்ஜனை

சிங்கத்தின் கர்ஜனை

சிவாஜியின் சங்கநாதம்
முரட்டுக்காளையின் பாய்ச்சல் - அதனால்
மூடர்கள் பலருக்கு காய்ச்சல் !

பாயும் புலியின் பார்வை
பாழும் வெயில் உனக்குப் போர்வை !
சத்தியம் பேசிட நீ வந்தாய் - மன்னா
சக்தியும் எமக்கு நீ தந்தாய் !

நெஞ்சிலே உரம் மிக கொண்டாய் - நீ
நண்பரே ஆயினும் நறுக்கென்று கேட்டாய்!
தர்மமே என்றும் உன்தாய் - என
தீமைகள் பொடிபட செய்தாய் !

நேர்மையும் நியாயமும் மட்டும்
நிச்சயம் வெல்லும் இனி என்றாய்!
துணிவென்றால் இதுவென்றே காட்டும்
தூயவா நீயே எம் வீட்டுப் பிள்ளாய் !

மடி மீது கனம் இல்லை என்று
மார் தட்டி நின்றாய் நீ இன்று !
அதர்மத்தை புதைத்திடு நீ கொன்று - ஆங்கே
ஆட்சிக்கு வரும் நாள் தான் என்று?

ஈ. ரா .

www.aakkal.blogspot.com